வெறும் வாய்க்கு அவல் போடாதீர்! | Dinamalar


சென்னை: ‘தி.மு.க., மீதான காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்’ என, கட்சித் தொண்டர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் விவரம்:

ஜனநாயகத்தின் எஜமானர்களான, மக்களின் பேராதரவை தொடர்ந்து பெற்று வரும் தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, அரியணை ஏறும் நாளில், தமிழகத்தில் பிடித்துள்ள இருள் விலகும். தி.மு.க., மீது காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.அடுத்து அமைய இருப்பது, தி.மு.க., அரசு தான் என்று, மக்கள் மனதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, ஓட்டுப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் பணி
யாற்ற சூளுரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

அறிவாலயத்தில் பொறுப்பேற்பு

தி.மு.க., பொதுச்செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலர்களாக பொன்முடி, ஆ.ராஜா ஆகிய நால்வரும், நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், நேற்று பொன்முடி, ஆ.ராஜா ஆகிய இருவரையும், துணைப் பொதுச் செயலர் பதவிக்கான நாற்காலிகளில், ஸ்டாலின் அமர வைத்தார். முன்னதாக, ஸ்டாலினிடம், புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். பின், புதிய நிர்வாகிகள், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராஜா ஆகியோருக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

AdvertisementSource link