விமானப் படையில் ரபேல்: வாலாட்டும் நாடுகளுக்கு இனி நெருக்கடி


அம்பாலா :பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள், இந்திய விமானப் படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டன. ரபேல் விமானங்களின் வருகை, இந்திய விமானப் படைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

இந்திய எல்லையில் வாலாட்டும் நாடுகளுக்கு, ரபேல் விமானங்களால் இனி நெருக்கடி காத்திருக்கிறது. ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.ரபேல் விமானங்கள், அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாரானவை. இரட்டை இன்ஜின்கள் உடைய இந்த விமானங்கள், எல்லாவிதமான காலநிலைகளிலும் இயங்கக் கூடியவை.

துல்லியமாக தாக்கும்

எதிரிகளின், ‘ரேடாரில்’ எளிதில் சிக்காத தொழில்நுட்ப வசதி உடையவை. வானிலிருந்து, தரையில் உள்ள இலக்குகளையும், வானில் உள்ள இலக்குகளையும், கடல் பகுதிகளில் உள்ள எதிரிகளின் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் உடையவை. அசாத்தியமான வேகமும், எதிரிகளின் ரேடார் கண்களில் மண்ணை துாவி விட்டு, இலக்கை துல்லியமாக தாக்கும் திறனும், ரபேல் போர் விமானங்களின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக ஐந்து ரபேல் விமானங்கள், ஜூலை, 29ல் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. இந்நிலையில் ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்வில், இந்த ஐந்து விமானங்களும், இந்திய விமானப் படையின், ‘கோல்டன் ஏரோஸ்’ என்ற, 17வது படைப்பிரிவில், நேற்று முறைப்படி இணைக்கப்பட்டன.

வரவேற்பு

முன்னதாக, அம்பாலா விமான தளத்திற்கு ரபேல் போர் விமானங்கள் வந்தபோது, அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.அனைத்து மத வழிபாட்டின் படி, சர்வ தர்ம பூஜையும் நடத்தப்பட்டது. இதன்பின், ரபேல், தேஜாஸ் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா மற்றும் விமானப் படை அதிகாரிகள் பங்கேற்றனர். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளதன் வாயிலாக, உலக நாடுகளுக்கு ஒரு உறுதியான செய்தியை கூற விரும்புகிறோம். குறிப்பாக, இந்திய இறையாண்மையை குறிவைக்கும் நாடுகளுக்கு, இதன் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

latest tamil news

புதிய பறவை

எங்கள் எல்லையில் நிலவும் சூழலை கருத்தில் வைத்தே, ரபேல் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்பட்டுஉள்ளன. காலம் மாறுகிறது என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அதற்கு ஏற்ப, எங்களை தயார் படுத்துகிறோம். தேச பாதுகாப்புக்குத் தான், பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பார் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’விமானப் படைக்கு வந்துள்ள புதிய பறவைகளை வரவேற்கிறோம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, மீதமுள்ள, 31 விமானங்களும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அத்தியாயம்

ரபேல் விமானங்களின் வருகை, இந்திய விமானப் படையின் பலத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், எல்லையில் வாலாட்டும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.ரபேல் விமானங்களின் இணைப்பு, இந்திய விமானப் படை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘சக்தி வாய்ந்த ஆயுதம்’

ரபேல் விமானங்களை இந்திய விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சியில், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி பேசியதாவது:ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையின் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பிராந்தியத்தில், மற்ற நாடுகளை விட, இந்தியாவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இந்திய விமானப் படை வலிமையாகி உள்ளது. உலகத் தரம் வாய்ந்த போர் விமானம், இந்திய விமானப் படைக்கு கிடைத்துள்ளது. ரபேல் விமானத்தை, நாங்கள், ‘நெருப்புப் பொறி’ என, அழைப்போம்.இறையாண்மையை பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த ஆயுதம், இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு, பிரான்ஸ் எப்போதும் ஆதரவு அளிக்கும். இந்த நிகழ்வின் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலம் அடைந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

AdvertisementSource link