ராஜ்யசபா துணை தலைவர் தேர்தல் : பொது வேட்பாளர் மனோஜ் ஜா?


வெற்றிக்கு தேவையான போதிய எண்ணிக்கை பலம் இல்லாத நிலையிலும், பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனையில் இருந்து, பின்வாங்க மறுக்கும் எதிர்க்கட்சிகள், ராஷ்டிரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜாவை களமிறக்க தயாராகி வருவதால், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.


கட்டாயம்

மழைக்கால கூட்டத் தொடருக்காக, வரும், 14ம் தேதி, பார்லிமென்ட்டின் இரு சபைகளும் கூடும் நிலையில், முதல் நாளன்று நடைபெறவுள்ள, ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.தே.ஜ., கூட்டணி வேட்பாளராக, ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே, மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க, பா.ஜ., மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக, கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளையில், தேர்தல் நாளன்று, அனைத்து பா.ஜ., எம்.பி.,க் களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென, கொறடா உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.

இதையடுத்து, சிறிய எண்ணிக்கையில் எம்.பி.,க்களை வைத்திருக்கும் பொதுவான கட்சிகளை, இரு தரப்புமே அணுகி, பேசத் துவங்கியுள்ளன.குறிப்பாக, தி.மு.க., எம்.பி., சிவாவை பொதுவேட்பாளராக ஆக்கலாம் என, காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. ஆனால், பல கட்சிகள், இதை ஏற்க மறுத்துவிட்டன.

‘பீஹார் சட்டசபைத் தேர்தல் வரப்போகிறது. பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீஹார்காரர். எனவே, அதே பீஹாரை சேர்ந்தவரையே, நாமும் நிறுத்த லாம்’ என்ற யோசனை பலம் பெற்றது.இதையடுத்து, ராஷ்டிரீய ஜனதா தள கட்சி எம்.பி., யான மனோஜ் ஜா நிறுத்தப்படலாம் என, தெரிகிறது. பேராசிரியரான அவர், டில்லி பல்கலைக்கழகத்தில், சமூகவியல் துறையின் தலைவராக இருந்துவிட்டு, கடந்த, 2018ல் தான், ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேட்புமனு

வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல், போட்டியிட்டே தீர வேண்டு மென எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துவிட்டால், பொது வேட்பாளராக, மனோஜ் ஜா, இன்று மாலைக்குள், வேட்புமனுவை தாக்கல் செய்யக் கூடும்.அவ்வாறு நிகழ்ந்தால், ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரீய ஜனதா தளமும், பீஹார் சட்டசபை தேர்தலில், நேருக்கு நேர் களம் காண்பதற்கு முன்பேயே, டில்லியில் ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் மோதக்கூடும்.- நமது டில்லி நிருபர் –

AdvertisementSource link