முக்கிய வங்கிச் சேவைகள் இனி வீட்டிலேயே!


புதுடில்லி: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும், இனி வங்கிகளுக்கு செல்லாமலேயே வங்கிச் சேவையை வீட்டிலேயே பெறும் வசதியை, பொதுத் துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன. முக்கிய வங்கி சேவைகளைப் பெற, போன் செய்தால் போதும்; வங்கியின் பிரதிநிதி வீட்டுக்கே வந்து அந்த சேவையை அளிப்பார்.

பொதுத் துறை வங்கி சேவையை எளிமையாக்கும் வகையில், ‘ஈஸ்’ என்ற திட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, வங்கி சேவையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, கடந்த, இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட, பொதுத் துறை வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இந்த விருதுகளை வழங்கினார்.
மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கான முதல் மூன்று விருதுகளை, பாங்க் ஆப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் முன்பு தனியாக செயல்பட்ட ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை பெற்றுள்ளன.
சிறந்த முன்னேற்றங்களை கண்டுள்ள மூன்று வங்கிகளாக, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் முன்பு தனியாக செயல்பட்ட கார்ப்பரேஷன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இத்துடன், வீட்டு வாசலிலேயே வங்கி சேவையை அளிக்கும் திட்டத்தையும், நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, வங்கியின் கால் சென்டர், இணையதளம் அல்லது ‘மொபைல் ஆப்’ மூலமாக நமக்கு தேவையான சேவைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக, நாடு முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 100 சேவை மையங்களைச் சேர்ந்த ஊழியர், வீடு தேடி வந்து அந்த சேவையை அளிப்பார்.தற்போதைக்கு, காசோலை கேட்டு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கில் காசோலையை செலுத்துவது, கணக்கு அறிக்கை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். ரொக்க சேவை, அடுத்த மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.

இந்த சேவைகளைப் பெறுவதற்கான கட்டணமாக, சிறிய தொகை வசூலிக்கப்படும். முதியோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
இதற்கான நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய சக்தியாக வங்கிகள் விளங்குகின்றன. அனைவருக்கும் வங்கி கணக்கு அளிக்கும், பிரதமர் ஜன்தன் திட்டத்தில், வங்கிகளின் சேவை மிகவும் மெச்சத்தக்கது. இருப்பினும், வங்கிகளின் சேவை இன்னும் விரிவடைய வேண்டியுள்ளது.
தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரடியாக உணர்ந்த வங்கிகளே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய காரணியாக விளங்கும்.

தனி நபர்கள் மற்றும் தொழில்துறையினர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு போராடி வருகின்றனர். அவர்களுடைய பிரச்னைகளை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வகையில், தற்போதுள்ள இடைவெளியைக் குறைப்பதிலும் வங்கிகள் முக்கிய பங்காற்ற உள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை வங்கிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தின்போது, அனைத்து தரப்பினரும் பிரச்னை இல்லாமல் தங்களுடைய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு, தொழில்நுட்பமே உதவியது. அதை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

AdvertisementSource link