மீனவர் நலனுக்கு ரூ.20,050 கோடியில் திட்டம்: துவக்கினார் பிரதமர் மோடி| Dinamalar


புவனேஸ்வர் : பிரதமர் மோடி, மீன்வளத் துறையின் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்க, 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு’ திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார்.

பீஹாரில், வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தேசிய அளவிலும், பீஹாரிலும் பல்வேறு நலத்திட்டங்களை நேற்றுஅறிமுகப்படுத்தினார்.அவர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பீஹார் முதல்வர், நிதிஷ் குமாருடன் பங்கேற்று, மீன் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகள் சார்ந்த பல திட்டங்களை அறிவித்தார்.

மீன்வளர்ப்பு

கால்நடைகள் தொடர்பான அரசு திட்டங்கள், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது, பிரசவ கால எச்சரிக்கை ஆகியவற்றை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் ‘இ – கோபாலா’ என்ற மொபைல் செயலியையும், மோடி அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
தற்சார்பு பாரதம் என்ற கொள்கைப்படி, அடுத்த ஐந்தாண்டுகளில், மீன் வளர்ப்பு திட்டத்தில், 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மீன்வளத் துறையில், இதுவரை இந்த அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்படவில்லை. 21 மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
இதனால், செயற்கை மீன் வளர்ப்பு துறையினர் பெரிதும் பயனடைவர். அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், மீன் உற்பத்தியை, கூடுதலாக, 70 லட்சம் டன் அதிகரித்து, இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில், மீன் ஏற்றுமதியை, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும், மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களின் வருவாயை இரு மடங்கு அதிகரிக்கவும், இத்திட்டம் துணை புரியும்.
அத்துடன், மீன் துறையில், கூடுதலாக, 55 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தேனீ வளர்ப்பு

இத்திட்டம், மீன்வளத் துறை வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பால் பொருட்கள் துறையின் வெண்மைப் புரட்சிக்கும், தேனீ வளர்ப்பு துறையின் இனிப்பு புரட்சிக்கும் வழி வகுக்கும்.இதனால், பால் மற்றும் தேன் தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் பயனடைவர். கங்கையின் துாய்மை திட்டத்திற்கும், டால்பின் மீன் திட்டத்திற்கான, துாய்மையான சுற்றுச்சூழல் உருவாக்கத்திற்கும் உதவும்.
கால்நடையை பராமரிப்பது, நோயற்ற மூல உயிரணுவை வாங்குவது, விற்பது, தரமான இனப்பெருக்க சேவைகள் மேற்கொள்வது போன்ற வற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள, எந்த மின்னணு தளமும் தற்போது இல்லை.இந்த குறையை தீர்க்க, ‘இ – கோபாலா’ மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

கொரோனாவை சாதாரணமாக எடை போட்டுவிடாதீர்கள். விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் வரை, சமூக தடுப்பூசி போல,முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைகடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்றுங்கள்.இது ஒன்று தான் தீர்வு.
பிரதமர் மோடி.

புதிய கல்விக் கொள்கைமத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ’21ம் நுாற்றாண்டின் பள்ளிக் கல்வி’ என்ற இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இன்று, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இம்மாநாட்டில் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்ற உள்ளார்.

மோடியுடன் ஷின்சோ அபே பேச்சு

ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே, நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில், 30 நிமிடம் உரையாடினார். அப்போது, சிறப்பு திட்டம் மூலம், இந்திய பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்காக,
இந்தியாவும், ஜப்பானும் இணைந்து எடுத்தமுயற்சிகளை அவர் நினைவு கூர்ந்தார் என, ஷின்சோ அபே அலுவலகம் தெரிவித்துள்ளது.

AdvertisementSource link