காவல்துறை மற்றொரு குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்: கனிமொழி


சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதுபோல் அல்லாமல், கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனே விரைந்து நடவடிக்கை எடுத்து மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்துள்ளார். ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை பலர் வரவேற்று உள்ளனர். 

அதேவேளையில், இந்த வழக்கில் சந்தோஷ்குமார் மட்டுமில்லை மற்றொருவரும் ஈடுபட்டுள்ளதாக தடயவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகியும், மற்றொருவர் குறித்து ஏன் போலீசார் விசாரிக்கவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவரை காப்பாற்ற தான் போலீசார் விசாரணை மேற்கொள்ள வில்லை என்று குற்றசாட்டும் ஒரு தரப்பினர் வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கு குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியது, “6 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ் என்பவர் குற்றவாளி என உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் பிரேத பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியின் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதுபோல் அல்லாமல், இதில் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

முன்னதாக இந்த வழக்கில் சந்தோஷ்குமார் தான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றவாளிக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏழு வயது சிறுமியின் தாய் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் எனது மகளின் தடயவியல் பரிசோதனை அறிக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதற்கான தடயங்கள் உள்ளன. இதுக்குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்க்கு சம்பந்தமாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Source link