இ.எம்.ஐ.,விவகாரத்தில் நிபுணர் குழு : மத்திய அரசு தகவல்| Dinamalar


புதுடில்லி : ‘இ.எம்.ஐ., ஒத்திவைப்பு காலத்துக்கு வட்டி வசூலிப்பது தொடர்பான பிரச்னை குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.’கொரோனா’ வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், தனி நபர் முதல், பல தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மாதத் தவணை

பொருளாதார பாதிப்பை சமாளிக்கும் வகையில், பல்வேறு மீட்பு திட்டங்களை, சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது.’இ.எம்.ஐ., எனப்படும் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான மாதத் தவணையை, மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்கலாம். ‘அவ்வாறு செலுத்தாவிட்டாலும், என்.பி.ஏ., எனப்படும் வாராக் கடனாக பார்க்கப்படாது’ என, முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த வசதி, மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

அது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், இ.எம்.ஐ., ஒத்திவைப்பு காலத்தில், கடனுக்கான வட்டி மற்றும் வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, நீதிபதிகள், அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு விசாரித்து வருகிறது.’இந்தாண்டு, ஆக., 31ம் தேதி நிலவரப்படி, வாராக் கடன்களாக அறிவிக்கப்படாத கணக்குகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, வாராக் கடன்களாக அறிவிக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தன் இடைக்கால உத்தரவில் கூறியிருந்தது.

நடவடிக்கை

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:இ.எம்.ஐ., ஒத்திவைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து ஆராய, மத்திய அரசில், உயர்மட்ட அளவில் பரிசீலனையில் உள்ளது. வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய, நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்க, இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.ஏற்கனவே, மத்திய அரசு பல்வேறு தரப்பினருடன், இரண்டு அல்லது மூன்று முறை பேச்சு நடத்தியுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளவை கனிவுடன் பரிசீலிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.வங்கிகள் சங்கம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், ஹரிஷ் சால்வே கூறியதாவது:கடன் தொகையை செலுத்தாத காலத்துக்கும் வட்டி வசூலிப்பது என்பது, அனைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை தான். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டுதலை வெளியிட வேண்டும். மின் துறைக்கு தரப்பட்ட கடன்களுக்கு, வங்கி களே அனைத்து சுமைகளையும் ஏற்க இயலாது. இதில், மாநிலங்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

கடைசி வாய்ப்பு!

அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பின், உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பிரச்னை குறித்து, அரசின் உயர்மட்ட அளவில் ஆய்வு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதனால், தற்போதைக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இ.எம்.ஐ., செலுத்தாவிட்டாலும், வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும்.
மத்திய அரசுக்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவாகும். இதற்கு மேலும் வழக்கை நீட்டிக்காமல், அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஆலோசித்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, அமர்வு கூறியது.வழக்கின் விசாரணை, வரும், 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

AdvertisementSource link