மீனவர் நலனுக்கு ரூ.20,050 கோடியில் திட்டம்: துவக்கினார் பிரதமர் மோடி| Dinamalar


புவனேஸ்வர் : பிரதமர் மோடி, மீன்வளத் துறையின் உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவற்றை அதிகரிக்க, 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘பிரதமர் மீன் வளர்ப்பு மேம்பாட்டு’ திட்டத்தை, நேற்று துவக்கி வைத்தார்.

பீஹாரில், வரும் நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி, தேசிய அளவிலும், பீஹாரிலும் பல்வேறு நலத்திட்டங்களை நேற்றுஅறிமுகப்படுத்தினார்.அவர் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பீஹார் முதல்வர், நிதிஷ் குமாருடன் பங்கேற்று, மீன் மற்றும் கால்நடை வளர்ப்பு துறைகள் சார்ந்த பல திட்டங்களை அறிவித்தார்.

மீன்வளர்ப்பு

கால்நடைகள் தொடர்பான அரசு திட்டங்கள், கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவது, பிரசவ கால எச்சரிக்கை ஆகியவற்றை விவசாயிகளுக்கு தெரிவிக்கும் ‘இ – கோபாலா’ என்ற மொபைல் செயலியையும், மோடி அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
தற்சார்பு பாரதம் என்ற கொள்கைப்படி, அடுத்த ஐந்தாண்டுகளில், மீன் வளர்ப்பு திட்டத்தில், 20 ஆயிரத்து, 50 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மீன்வளத் துறையில், இதுவரை இந்த அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்படவில்லை. 21 மாநிலங்களில் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.
இதனால், செயற்கை மீன் வளர்ப்பு துறையினர் பெரிதும் பயனடைவர். அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், மீன் உற்பத்தியை, கூடுதலாக, 70 லட்சம் டன் அதிகரித்து, இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில், மீன் ஏற்றுமதியை, 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும், மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களின் வருவாயை இரு மடங்கு அதிகரிக்கவும், இத்திட்டம் துணை புரியும்.
அத்துடன், மீன் துறையில், கூடுதலாக, 55 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தேனீ வளர்ப்பு

இத்திட்டம், மீன்வளத் துறை வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பால் பொருட்கள் துறையின் வெண்மைப் புரட்சிக்கும், தேனீ வளர்ப்பு துறையின் இனிப்பு புரட்சிக்கும் வழி வகுக்கும்.இதனால், பால் மற்றும் தேன் தொழிலை சார்ந்துள்ள ஏராளமானோர் பயனடைவர். கங்கையின் துாய்மை திட்டத்திற்கும், டால்பின் மீன் திட்டத்திற்கான, துாய்மையான சுற்றுச்சூழல் உருவாக்கத்திற்கும் உதவும்.
கால்நடையை பராமரிப்பது, நோயற்ற மூல உயிரணுவை வாங்குவது, விற்பது, தரமான இனப்பெருக்க சேவைகள் மேற்கொள்வது போன்ற வற்றை விவசாயிகள் அறிந்து கொள்ள, எந்த மின்னணு தளமும் தற்போது இல்லை.இந்த குறையை தீர்க்க, ‘இ – கோபாலா’ மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்

கொரோனாவை சாதாரணமாக எடை போட்டுவிடாதீர்கள். விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் வரை, சமூக தடுப்பூசி போல,முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைகடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்றுங்கள்.இது ஒன்று தான் தீர்வு.
பிரதமர் மோடி.

புதிய கல்விக் கொள்கைமத்திய கல்வி அமைச்சகம் சார்பில், ’21ம் நுாற்றாண்டின் பள்ளிக் கல்வி’ என்ற இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இன்று, பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இம்மாநாட்டில் பங்கேற்று, புதிய கல்விக் கொள்கை குறித்து உரையாற்ற உள்ளார்.

மோடியுடன் ஷின்சோ அபே பேச்சு

ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே, நேற்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில், 30 நிமிடம் உரையாடினார். அப்போது, சிறப்பு திட்டம் மூலம், இந்திய பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்காக,
இந்தியாவும், ஜப்பானும் இணைந்து எடுத்தமுயற்சிகளை அவர் நினைவு கூர்ந்தார் என, ஷின்சோ அபே அலுவலகம் தெரிவித்துள்ளது.

AdvertisementSource link

வெறும் வாய்க்கு அவல் போடாதீர்! | Dinamalar


சென்னை: ‘தி.மு.க., மீதான காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்’ என, கட்சித் தொண்டர்களுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதம் விவரம்:

ஜனநாயகத்தின் எஜமானர்களான, மக்களின் பேராதரவை தொடர்ந்து பெற்று வரும் தி.மு.க., அடுத்த சட்டசபை தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று, அரியணை ஏறும் நாளில், தமிழகத்தில் பிடித்துள்ள இருள் விலகும். தி.மு.க., மீது காழ்ப்புணர்வுடன், வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களை தவிர்த்து, மக்களிடம் சென்று, களப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.அடுத்து அமைய இருப்பது, தி.மு.க., அரசு தான் என்று, மக்கள் மனதில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, ஓட்டுப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில், தேர்தல் பணி
யாற்ற சூளுரைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

அறிவாலயத்தில் பொறுப்பேற்பு

தி.மு.க., பொதுச்செயலராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலர்களாக பொன்முடி, ஆ.ராஜா ஆகிய நால்வரும், நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சி தலைமை அலுவலகமான, அறிவாலயத்தில், நேற்று பொன்முடி, ஆ.ராஜா ஆகிய இருவரையும், துணைப் பொதுச் செயலர் பதவிக்கான நாற்காலிகளில், ஸ்டாலின் அமர வைத்தார். முன்னதாக, ஸ்டாலினிடம், புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர். பின், புதிய நிர்வாகிகள், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, ஆ.ராஜா ஆகியோருக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நேற்று வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

AdvertisementSource link

சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்| Dinamalar


மாஸ்கோ: கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சரிடம் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயையும் சந்தி்தார்.

இந்திய சீன எல்லை விவகாரம் இன்னும் முடிவுக்குவராத நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை ரஷ்யாவில் சந்தித்து பேசியது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

latest tamil news

தற்போது இந்திய -சீன எல்லை பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. இரு தரப்பிலும் படைகளை குவித்து வருவது பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயை , நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இருவரும் இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து 2 மணி நேரத்திற்கு மேல் விவாதித்தனர். அப்போது எல்லை பிரச்னை குறித்தும் ஆலோசித்தனர்..இதில் . கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

AdvertisementSource link

கங்கனா ரணாவத் கட்டட விதிமீறல் நீதிமன்றத்தில் மும்பை மாநகராட்சி மனு| Dinamalar


மும்பை,: பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பங்களாவை உள்நோக்கத்துடன் இடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, மும்பை மாநகராட்சி, மறுத்துள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

கடும் கோபம்

இம்மாநிலம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளதாக, கங்கனா கூறியது, சிவசேனா கட்சிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள, கங்கனாவின் பங்களாவில், விதிகளை மீறி கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, அவற்றை இடிக்க, மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, கங்கனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், கட்டட இடிப்புக்கு தடை விதித்தது. இதையடுத்து, மும்பை மாநகராட்சி சார்பில், நேற்று உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கங்கனா ரணாவத், தன் பங்களாவில், மாநக ராட்சி அனுமதியின்றி, சட்ட விரோதமாக கூடுதல் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை, அவர் மறுக்கவில்லை. இதில் இருந்து, அவர் சட்டமீறலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வருகிறது.

latest tamil news

‘வீடியோ’ பதிவு

கட்டடத்தை இடிப்பதில், மாநகராட்சிக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அதுபோல, கங்கனா ரணாவத், மேற்கொண்டு கட்டட பணிகளை தொடர தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அதை ஏற்க மறுத்த நீதிப்தி, வழக்கு விசாரணையை, வரும், 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதற்கிடையே, ‘என் பங்களா இடிந்தது போல, முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஆணவம் ஒரு நாள் அழியும்’ என, கங்கனா ரணாவத், ‘வீடியோ’ பதிவு வெளியிட்டார்.இதையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமாக பேசியது குறித்து, கங்கனா ரணாவத் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, நிதின் விக்ரோலி என்ற வழக்கறிஞர், போலீசில் புகார் செய்தார்.
புகாரை பெற்ற போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுத்து, நீதிமன்றத்தில் முறையிடுமாறு தெரிவித்துஉள்ளனர்.

AdvertisementSource link

ராஜ்யசபா துணை தலைவர் தேர்தல் : பொது வேட்பாளர் மனோஜ் ஜா?


வெற்றிக்கு தேவையான போதிய எண்ணிக்கை பலம் இல்லாத நிலையிலும், பொது வேட்பாளரை நிறுத்தும் யோசனையில் இருந்து, பின்வாங்க மறுக்கும் எதிர்க்கட்சிகள், ராஷ்டிரீய ஜனதா தள எம்.பி., மனோஜ் ஜாவை களமிறக்க தயாராகி வருவதால், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.


கட்டாயம்

மழைக்கால கூட்டத் தொடருக்காக, வரும், 14ம் தேதி, பார்லிமென்ட்டின் இரு சபைகளும் கூடும் நிலையில், முதல் நாளன்று நடைபெறவுள்ள, ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.தே.ஜ., கூட்டணி வேட்பாளராக, ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே, மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க, பா.ஜ., மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதற்காக, கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளையில், தேர்தல் நாளன்று, அனைத்து பா.ஜ., எம்.பி.,க் களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென, கொறடா உத்தரவு போடப்பட்டுள்ளது.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.

இதையடுத்து, சிறிய எண்ணிக்கையில் எம்.பி.,க்களை வைத்திருக்கும் பொதுவான கட்சிகளை, இரு தரப்புமே அணுகி, பேசத் துவங்கியுள்ளன.குறிப்பாக, தி.மு.க., எம்.பி., சிவாவை பொதுவேட்பாளராக ஆக்கலாம் என, காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. ஆனால், பல கட்சிகள், இதை ஏற்க மறுத்துவிட்டன.

‘பீஹார் சட்டசபைத் தேர்தல் வரப்போகிறது. பா.ஜ., நிறுத்தியுள்ள வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீஹார்காரர். எனவே, அதே பீஹாரை சேர்ந்தவரையே, நாமும் நிறுத்த லாம்’ என்ற யோசனை பலம் பெற்றது.இதையடுத்து, ராஷ்டிரீய ஜனதா தள கட்சி எம்.பி., யான மனோஜ் ஜா நிறுத்தப்படலாம் என, தெரிகிறது. பேராசிரியரான அவர், டில்லி பல்கலைக்கழகத்தில், சமூகவியல் துறையின் தலைவராக இருந்துவிட்டு, கடந்த, 2018ல் தான், ராஜ்யசபாவுக்கு எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வேட்புமனு

வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாமல், போட்டியிட்டே தீர வேண்டு மென எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துவிட்டால், பொது வேட்பாளராக, மனோஜ் ஜா, இன்று மாலைக்குள், வேட்புமனுவை தாக்கல் செய்யக் கூடும்.அவ்வாறு நிகழ்ந்தால், ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரீய ஜனதா தளமும், பீஹார் சட்டசபை தேர்தலில், நேருக்கு நேர் களம் காண்பதற்கு முன்பேயே, டில்லியில் ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் மோதக்கூடும்.- நமது டில்லி நிருபர் –

AdvertisementSource link

விமானப் படையில் ரபேல்: வாலாட்டும் நாடுகளுக்கு இனி நெருக்கடி


அம்பாலா :பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கப்பட்ட ஐந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள், இந்திய விமானப் படையில் நேற்று முறைப்படி இணைக்கப்பட்டன. ரபேல் விமானங்களின் வருகை, இந்திய விமானப் படைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

இந்திய எல்லையில் வாலாட்டும் நாடுகளுக்கு, ரபேல் விமானங்களால் இனி நெருக்கடி காத்திருக்கிறது. ஐரோப்பிய நாடான பிரான்சின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.ரபேல் விமானங்கள், அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாரானவை. இரட்டை இன்ஜின்கள் உடைய இந்த விமானங்கள், எல்லாவிதமான காலநிலைகளிலும் இயங்கக் கூடியவை.

துல்லியமாக தாக்கும்

எதிரிகளின், ‘ரேடாரில்’ எளிதில் சிக்காத தொழில்நுட்ப வசதி உடையவை. வானிலிருந்து, தரையில் உள்ள இலக்குகளையும், வானில் உள்ள இலக்குகளையும், கடல் பகுதிகளில் உள்ள எதிரிகளின் இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் உடையவை. அசாத்தியமான வேகமும், எதிரிகளின் ரேடார் கண்களில் மண்ணை துாவி விட்டு, இலக்கை துல்லியமாக தாக்கும் திறனும், ரபேல் போர் விமானங்களின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, முதல் கட்டமாக ஐந்து ரபேல் விமானங்கள், ஜூலை, 29ல் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. இந்நிலையில் ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள விமானப் படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்வில், இந்த ஐந்து விமானங்களும், இந்திய விமானப் படையின், ‘கோல்டன் ஏரோஸ்’ என்ற, 17வது படைப்பிரிவில், நேற்று முறைப்படி இணைக்கப்பட்டன.

வரவேற்பு

முன்னதாக, அம்பாலா விமான தளத்திற்கு ரபேல் போர் விமானங்கள் வந்தபோது, அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.அனைத்து மத வழிபாட்டின் படி, சர்வ தர்ம பூஜையும் நடத்தப்பட்டது. இதன்பின், ரபேல், தேஜாஸ் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா மற்றும் விமானப் படை அதிகாரிகள் பங்கேற்றனர். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளதன் வாயிலாக, உலக நாடுகளுக்கு ஒரு உறுதியான செய்தியை கூற விரும்புகிறோம். குறிப்பாக, இந்திய இறையாண்மையை குறிவைக்கும் நாடுகளுக்கு, இதன் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

latest tamil news

புதிய பறவை

எங்கள் எல்லையில் நிலவும் சூழலை கருத்தில் வைத்தே, ரபேல் விமானங்கள் விமானப் படையில் சேர்க்கப்பட்டுஉள்ளன. காலம் மாறுகிறது என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அதற்கு ஏற்ப, எங்களை தயார் படுத்துகிறோம். தேச பாதுகாப்புக்குத் தான், பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பார் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,’விமானப் படைக்கு வந்துள்ள புதிய பறவைகளை வரவேற்கிறோம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தப்படி, மீதமுள்ள, 31 விமானங்களும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அத்தியாயம்

ரபேல் விமானங்களின் வருகை, இந்திய விமானப் படையின் பலத்தை மேலும் அதிகரித்துள்ள நிலையில், எல்லையில் வாலாட்டும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.ரபேல் விமானங்களின் இணைப்பு, இந்திய விமானப் படை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘சக்தி வாய்ந்த ஆயுதம்’

ரபேல் விமானங்களை இந்திய விமானப் படையில் இணைக்கும் நிகழ்ச்சியில், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி பேசியதாவது:ரபேல் விமானங்கள் இந்திய விமானப் படையின் இணைக்கப்பட்டுள்ளதால், இந்த பிராந்தியத்தில், மற்ற நாடுகளை விட, இந்தியாவின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. இந்திய விமானப் படை வலிமையாகி உள்ளது. உலகத் தரம் வாய்ந்த போர் விமானம், இந்திய விமானப் படைக்கு கிடைத்துள்ளது. ரபேல் விமானத்தை, நாங்கள், ‘நெருப்புப் பொறி’ என, அழைப்போம்.இறையாண்மையை பாதுகாப்பதற்கான சக்திவாய்ந்த ஆயுதம், இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு, பிரான்ஸ் எப்போதும் ஆதரவு அளிக்கும். இந்த நிகழ்வின் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் பலம் அடைந்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

AdvertisementSource link

முக்கிய வங்கிச் சேவைகள் இனி வீட்டிலேயே!


புதுடில்லி: முதியோர், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும், இனி வங்கிகளுக்கு செல்லாமலேயே வங்கிச் சேவையை வீட்டிலேயே பெறும் வசதியை, பொதுத் துறை வங்கிகள் அறிமுகம் செய்துள்ளன. முக்கிய வங்கி சேவைகளைப் பெற, போன் செய்தால் போதும்; வங்கியின் பிரதிநிதி வீட்டுக்கே வந்து அந்த சேவையை அளிப்பார்.

பொதுத் துறை வங்கி சேவையை எளிமையாக்கும் வகையில், ‘ஈஸ்’ என்ற திட்டம், 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, வங்கி சேவையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி, கடந்த, இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட, பொதுத் துறை வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இந்த விருதுகளை வழங்கினார்.
மிகச் சிறப்பாக செயல்பட்டதற்கான முதல் மூன்று விருதுகளை, பாங்க் ஆப் பரோடா, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் முன்பு தனியாக செயல்பட்ட ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை பெற்றுள்ளன.
சிறந்த முன்னேற்றங்களை கண்டுள்ள மூன்று வங்கிகளாக, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் முன்பு தனியாக செயல்பட்ட கார்ப்பரேஷன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.இத்துடன், வீட்டு வாசலிலேயே வங்கி சேவையை அளிக்கும் திட்டத்தையும், நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, வங்கியின் கால் சென்டர், இணையதளம் அல்லது ‘மொபைல் ஆப்’ மூலமாக நமக்கு தேவையான சேவைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்டமாக, நாடு முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 100 சேவை மையங்களைச் சேர்ந்த ஊழியர், வீடு தேடி வந்து அந்த சேவையை அளிப்பார்.தற்போதைக்கு, காசோலை கேட்டு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கில் காசோலையை செலுத்துவது, கணக்கு அறிக்கை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். ரொக்க சேவை, அடுத்த மாதத்தில் இருந்து துவங்க உள்ளது.

இந்த சேவைகளைப் பெறுவதற்கான கட்டணமாக, சிறிய தொகை வசூலிக்கப்படும். முதியோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்டோருக்கு இந்த திட்டம் மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.
இதற்கான நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்போதுள்ள சூழ்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முக்கிய சக்தியாக வங்கிகள் விளங்குகின்றன. அனைவருக்கும் வங்கி கணக்கு அளிக்கும், பிரதமர் ஜன்தன் திட்டத்தில், வங்கிகளின் சேவை மிகவும் மெச்சத்தக்கது. இருப்பினும், வங்கிகளின் சேவை இன்னும் விரிவடைய வேண்டியுள்ளது.
தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை நேரடியாக உணர்ந்த வங்கிகளே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முக்கிய காரணியாக விளங்கும்.

தனி நபர்கள் மற்றும் தொழில்துறையினர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு போராடி வருகின்றனர். அவர்களுடைய பிரச்னைகளை உணர்ந்து, அதற்கு தீர்வு காணும் வகையில், தற்போதுள்ள இடைவெளியைக் குறைப்பதிலும் வங்கிகள் முக்கிய பங்காற்ற உள்ளன.
தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை வங்கிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தின்போது, அனைத்து தரப்பினரும் பிரச்னை இல்லாமல் தங்களுடைய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு, தொழில்நுட்பமே உதவியது. அதை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

AdvertisementSource link

இறுதியாண்டு செமஸ்டர் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி ரத்தாகிறது?| Dinamalar


சென்னை: இறுதியாண்டு பருவத் தேர்வுகளில், ‘அரியர்’ வைத்த மாணவர்களுக்கு மட்டும், ‘ஆல் பாஸ்’ முடிவை ரத்து செய்வது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக, பல்கலை மற்றும் கல்லுாரிகளின், ‘செமஸ்டர்’ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு செமஸ்டர் பாடங்களைத் தவிர, மற்ற அனைத்து பாடத் தேர்வுகளுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

ஆட்சேபம்

மேலும், ஏப்ரல், மே தேர்வில், அரியர் பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தால், தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.அரியர் தேர்ச்சி அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் சுரப்பாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அப்பல்கலையின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சகஸ்ரபுதே, அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவு, அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம், தமிழக உயர் கல்வித் துறைக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படியே, அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவு அறிவிக்கப்பட்டதாக, தமிழக அரசு அறிவித்தது.இதற்கிடையில், அரியர் பாடங்களில் தேர்ச்சி வழங்கினாலும், அந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. அதேபோல், ஆல் பாஸ் பெற்ற மாணவர்களை, உயர் கல்வியில் சேர்க்க, மற்ற கல்வி நிறுவனங்கள் தயங்கும் என, கூறப்படுகிறது.

ஆலோசனை

எனவே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், அனைவருக்கும் தேர்ச்சி முடிவை மாற்றுவது குறித்து, தமிழக உயர் கல்வித் துறை ஆலோசனை மேற் கொண்டுள்ளது.இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., – யு.ஜி.சி., மற்றும் என்.பி.ஏ., எனப்படும், தேசிய தர மதிப்பீட்டு அமைப்பு ஆகியவற்றின் விதிகளை, உயர் கல்வித் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல, தமிழக சட்டத் துறை வழியாக, சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளன. எனவே, விரைவில் ஆல் பாஸ் முடிவில் மாற்றம் இருக்கும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்து செய்யலாம்

கலை மற்றும் அறிவியல் படிப்புகளிலும், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட் படிப்புகளிலும், இறுதியாண்டில் செமஸ்டர் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு மட்டும், அனைவருக்கும் தேர்ச்சி அறிவிப்பை ரத்து செய்யலாம் என, கூறப்படுகிறது.

இறுதியாண்டு அரியர் பாடங்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்தலாம் என்றும், உயர் கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு தமிழக அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AdvertisementSource link

பள்ளிக் கல்வி இயக்குனரின் அதிகாரம் திடீர் குறைப்பு| Dinamalar


சென்னை :பள்ளிக் கல்வி துறையில்,இயக்குனருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டு, பள்ளிக் கல்வி கமிஷனருக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றது முதல், பல்வேறு மாற்றங்களை செய்துள்ளார்.ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ‘ஆன்லைன்’ முறைக்கு மாறியது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் பணி விபரங்கள் உள்ளிட்டவையும், ஆன்லைன் முறைக்கு மாறின.மாவட்ட அளவில், சி.இ.ஓ.,க்கள் என்ற, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.அதேபோல, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில், புதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டது. அதில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன், முதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு, அரசின் கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்வது, பள்ளிகளின் செயல்பாடுகளை பார்வையிடுவது, புதிய பாடத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்வதுபோன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன.படிப்படியாக, கமிஷனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கான அதிகாரம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் கூறியதாவது:பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கம்.இனி, கமிஷனரின் அனுமதி பெற்றோ அல்லதுஒப்புதல் பெற்றோ, சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய முடிவுகளை, கமிஷனரின் அனுமதியின்றி மேற்கொள்ளக் கூடாது. பள்ளி விடுமுறை, பள்ளி வேலை நாட்கள், அகாடமிக்விவகாரம் போன்றவற்றில், கமிஷனரின் அறிவுரையை பெற்ற பின்னரே செயல்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் எதிரொலியாக, பள்ளிகளின் காலாண்டு விடுமுறை அறிவிப்பையும், ‘ஆன்லைன்’ வகுப்புகள் ரத்து தொடர்பான அறிவிப்பையும், அமைச்சர் வெளியிட்டார்.

அவரை தொடர்ந்து, பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் செய்திக்குறிப்பாக வெளியிட்டார். வரும் காலங்களில், இயக்குனரின் அதிகாரங்கள், மேலும் குறைக்கப்படும் என, தெரிகிறது.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

AdvertisementSource link

நிவேதிதையை குருவாக ஏற்ற பாரதியார்!| Dinamalar


நுாறு ஆண்டுகளுக்கு முன், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அருகில் டாக்டர் எம்.ஜி.நஞ்சுண்டராவுக்குச் சொந்தமான ஒரு வீடு இருந்தது.அந்த வீட்டில் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்ந்து வந்தார்.பாரதியார் தினந்தோறும் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்லும் வழக்கமுடையவர். அவ்விதம் செல்லும் போது, அங்கு அவர் கோவில் யானைக்குத் தேங்காய், பழம் கொடுப்பதையும் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

துாக்கி எறிந்த யானை

அவர், ஒரு நாள் கோவில் யானைக்கு வழக்கம் போல் தேங்காய், பழம் கொடுத்தார். அப்போது அந்தக் கோவில் யானை, பாரதியாரைத் தன் துதிக்கையால் துாக்கி எறிந்துவிட்டது. மதம் பிடித்த யானையின் சேஷ்டையால், பாரதியாரின் தேகம் முழுதும் ஊமைக் காயங்கள். இவை பாரதியாருக்கு மரண வலியைத் தந்தன. இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் இறைவனுடன் கலக்கும் இறுதி நாள் வந்தது. பாரதியார் தன், 37வது வயதில் நஞ்சுண்டராவ் வீட்டில், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 11ம் நாள் மண்ணுலகில் இருந்து மறைந்தார்.அடுத்த நாள் காலை, 8:00 மணிக்கு பாரதியார் சடலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.சடலத்தை பரலி சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர், குவளைக்கண்ணன், ஹரிஹர் சர்மா, யதிராஜ் சுரேந்திர நாத் ஆர்யா ஆகியோர் சுமந்து சென்றனர். இந்தச் சவ ஊர்வலத்தில்கலந்து கொண்டவர்களின்எண்ணிக்கை இருபதுக்கும்குறைவாகவே இருந்தது.அன்று உடல் தான் மறைந்தது. ஆனால், இன்றும் அவரது கவிதை மறையவில்லை. உலகையே வசீகரிக்கும் ஞானப் பொக்கிஷமாகப் பிரகாசிக்கிறது.

புத்தம் புதிய கவிதை: சின்னசாமி ஐயர், இலக்குமிஅம்மாள் தம்பதியினருக்கு, 1882 டிசம்பர், 11ம் நாள் துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். பாரதி எட்டயபுரத்தில், தன்னுடைய ஏழாவது வயதில் கதைகள் எழுத ஆரம்பித்தார். பாரதி, 1893ம் ஆண்டு தன், 11ம் வயதில், ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்று முதல் வரியைக் கொண்ட ஒரு பாடலை எழுதினார். இதுவே, பாரதி எழுதி உலகத்துக்குத் தெரிந்த முதல் பாடல்.
அவரது கவிதை ஆற்றலை, முதன் முதலில்புரிந்து கொண்டவர் சிவஞானயோகியார் சுவாமிகள். அவர், பாரதியின் நாவில் கலைமகள் எழுந்தருளியிருப்பதை உணர்ந்தார். அவருக்குப், ‘பாரதி’ என்ற பட்டம் வழங்கினார்.

பாரதியாரை கவர்ந்த எழுத்து: ‘இந்தியா’ என்ற பத்திரிகையின் முதல் இதழில், ‘யானையும், யானைக் கூட்டமும்’ என்ற தலைப்பில் சகோதரி நிவேதிதையின் ஒரு கட்டுரை வெளிவந்தது.’ஒரு யானை தனியாக இருந்தால், அதை நாம் சுலபமாக ஜெயித்துவிட முடியும். ஆனால், ஒரு யானைக் கூட்டத்தையே தாக்கி, அதை ஜெயிக்கக் கூடிய மனிதன் எங்கே இருக்கிறான்? பொதுக் கருத்தைக் கருதி ஒரு தேசத்திலே பெரும்பான்மையான ஜனங்கள் ஒரே மனதுடன் உழைக்க நிச்சயித்து விடுவார்களானால், அவர்களுக்கு அபரிமிதமான பலம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை எதிர்க்க எவராலும் முடியாது.’இந்தியாவில் இன்றைக்கு நாம் ஒற்றுமையை ஏற்படுத்தாவிட்டால், என்றைக்கும் அதை யாராலும் செய்ய முடியாது. ஒரு உடலை எப்படி இரண்டு கூறுகளாகப்பிரிக்க முடியாதோ, அப்படி இந்தியாவை, ‘வடநாடு’ என்றும், ‘தென்னாடு’ என்றும் தொடர்பற்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியாது.’நாம் பலவீனர்கள், நாம் பிளவுபட்டு விட்டோம். நாம் துர்பாக்கிய சாலிகள், ஆதரவற்றவர்கள் ஆகிவிட்டோம்’ என்றெல்லாம் பேசுபவர்கள் இருக்கின்றனர். நம்மைத் தாழ்த்தும் இது போன்ற கருத்துக்களை, நாம் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. புதிய நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்’ என்றார் சகோதரி நிவேதிதை.

தேச பக்தி: பாரதி, 1909ல் வெளிவந்த, ‘ஸ்வதேச கீதங்கள்’ முன்னுரையில், ‘சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கு மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தை எல்லாம் உடனே புளகாங்கீதமாயின’ என்று குறிப்பிடுகிறான்.’சுதந்திரம் என் பிறப்புரிமை’ என்று கர்ஜித்த லோகமான்ய பாலகங்காதர திலகர், பாரதியாரை பெரிதும் கவர்ந்தார். ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!’ என்று தாய்நாட்டைப் போற்றிப் பாடினான்.

சுயநல வெறி

‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று ஒற்றுமை உணர்வை உருவாக்கினான்.’ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ!’ என்று தாய் அன்பைக் கூறி வேற்றுமைகளைக் களைய முற்பட்டான்.

தெய்வீகப் புலவன்: வேதங்களையும், உபநிடதங்களையும் படித்த பாரதி, அதை மக்களுக்குப் புரியும் படி சுலபமாகக் கூறினான். பறவையின் வேகமாக, நாயின் நன்றியாக, மரத்தின் உயிராற்றலாக, அலைகடலின் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக தெரிவது எல்லாம் பரம்பொருள்தானே! எனவே, ‘ஒன்றே அனைத்தும்! அனைத்தும் அதுவே!’ என்கிற வேதாந்தக் கருத்துக்களை எடுத்துரைத்தான். ‘ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்!’ எனவே, ‘அந்தப் பரம்பொருளை அடைய, காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும், பரமநிலை யெய்துதற்கே’ என்றான்.’சுத்த அறிவே சிவம்’ என்றான். துாய உள்ளுணர்வு மூலம் ஆண்டவனை உணர முடியும் என்றான்.

பாரதியாரின் பார்வை: காசியில் நடந்த காங்கிரஸ் மகாசபை, பாரதியாரைப் புது மனிதனாக மாற்றியது.1906ல் தாதாபாய் நவுரோஜி, காங்கிரஸ் தலைவராயிருந்தார். ‘சுய ராஜ்யம்’ என்னும் கோஷத்தையும் கிளப்பி விட்டார். பாரதியார், இந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். கோல்கட்டா அருகில், ‘டம் டம்’ என்ற ஊரில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.அவர் பாரதியாரிடம் பொதுவாகப் பல விஷயங்களைப் பேசிவிட்டு, ‘அன்பு மகனே! உனக்கு இன்னும் விவாஹம் ஆகவில்லையா?’ என்று கேட்டாராம்.பாரதியார், ‘தாயே! எனக்கு விவாஹமாகி இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது’ என்றார். ‘நிரம்ப சந்தோஷம்! ஆனால், மனைவியை ஏன் உடன் அழைத்து வரவில்லை?’ என்றார் அம்மையார். ‘இன்னும் எங்களில் மனைவியைச் சரி சமமாகப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை.

மேலும், காங்கிரசுக்கு அவளை அழைத்து வந்தால், என்ன பிரயோசனம்?’ என்றார் பாரதியார்.இதைக் கேட்டு அம்மையாருக்கு கோபம் உண்டாயிற்று. ‘மகனே! புருஷர்கள் அனேகம் பேர், படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்களாக இருக்கின்றனர். ஸ்திரீகளை அடிமைகள் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள். அவர்களும் கூட, இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்?’ என்று அன்பாகக் கடிந்து கொண்டார். பாரதியார் வெட்கித் தலை குனிந்தார்.பின், ‘சரி, போனது போகட்டும்! இனிமேலாவதுஅவளைத் தனி என்று நினைக்காமல், உன் சொந்தக்கரம் என மதித்து, மனத்தில் அவளைத் தெய்வம் என்று போற்றி நடந்து வருதல் வேண்டும்’ என்றாராம்.அன்று முதல் சகோதரிநிவேதிதையைத் தன் ஞான குருவாக பாரதி ஏற்றார்.

பெண்ணின் பெருமை

பின், ‘புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி’ போன்ற பாடல்களைப் படைத்தான். ‘பெண் உயராவிட்டால் ஆண் உயர மாட்டான். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மடத்தனம்’ என்று கூறினான்.பெண்களின் கவுரவத்தை உயர்த்தும் பொருட்டு, ஒரு செயல் திட்டமாக, 10 கட்டளைகளைக் கொடுத்தான்.

* பெண்களை ருதுவாகும் முன் விவாஹம் செய்து கொடுக்கக் கூடாது.
* அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாஹம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது.
* விவாஹம் செய்து கொண்ட பின், அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
* பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும்.
* புருஷன் இறந்த பின் ஸ்திரீ மறுபடி விவாஹம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
* விவாஹமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கவுரவமாக வாழ விரும்பும் ஸ்திரீகளை, யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
* பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும், பழகக் கூடாதென்றும், பயத்தாலும், பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.*பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்விதர வேண்டும்.
*தகுதியுடன் அவர்கள், அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.* பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.

அமரகவி பாரதியாரின், 100வது நினைவு நாள்: பாரதியின் பேனா, பாமர மக்களின் இதயத் துடிப்பாக விளங்கியது. எளிய சொற்கள், புதிய உயிர், புதிய உணர்வு, புதிய பரிமாணம், பண்டிதன், பாமரன் வேறுபாடின்றி அனைவருக்கும் புரியும் கவிதை. நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து, வழிநடைச் சிந்து போன்ற நாட்டுப்புற இசை மரபுகளில், மறவன்,கோணங்கி, அம்மாக்கண்ணு, வண்டிக்காரன் போன்ற மண் சார்ந்த கவிதைகளைப் படைத்தான் பாரதி. அவனது கவிதைகளின் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது. பராசக்தியால் செய்யப்படுவது தான் கவிதை என்ற உள்ளுணர்வே, அவனை பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பிரமிக்க வைத்தது. பாரதியின் கவிதை, எந்நாளும் அழியாத மகா காவியம்.பாரதியாரது, 100வது நினைவு நாளில் அவனை வணங்குவோம். அவன் காட்டிய வழியில் நடப்போம் என்று உறுதி பூணுவோமாக!
வி.சண்முகநாதன் முன்னாள் ஆளுநர் : 99992 00840

AdvertisementSource link